சென்னை:'பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல, கல்வி துறையில் உரிய அனுமதி பெற வேண்டும்; பள்ளிக் கல்வியின் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்று, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில், மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த சுற்றுலாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தரப்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளிகள், முறைப்படி கல்வித்துறை அதிகாரிகளிடம் கடிதம் அளித்து, அனுமதி பெற வேண்டும். நீர்நிலைகள், ஆபத்தான மலைப் பகுதிகள், கடலோர பகுதிகளுக்கு, மாணவர்களை அழைத்து செல்லக் கூடாது.
சுற்றுலா அழைத்துச் செல்ல மாணவர்களின், பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
உரிய விதிகளை பின்பற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவையான ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களை பாதுகாப்புக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.