தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேட்டி: சுவாமிமலை பகுதியில், வியாபாரிகளை அச்சுறுத்தும் விதமாக, தாக்குதல் நடந்து வருகிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும். மே, 5ல், ஈரோட்டில் நடைபெறும், 40-வது மாநில மாநாட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், அமைப்பின் நகர்வுகள் வேறு பக்கமாக இருக்கும்.
* 'முதல்வர் கோவிச்சிக்காதபடி, மென்மையா பேட்டி தரணும்... கண்டனம், போராட்டம் என்ற வார்த்தையை, இனி அடியோடு மறந்துடணும்'னு சத்திய பிரமாணம் எடுத்திருப்பாரோ?
***
த.மா.கா., இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்துவது தான், அ.தி.மு.க., கூட்டணியின் குறிக்கோள். நீதிமன்ற வழக்கில், இரட்டை இலை சின்னம் பழனி சாமிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னம், மக்களுக்கு பரிச்சயமான சின்னம் என்பதை மறுக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேறு சின்னம் வந்தாலும், மக்களிடம் எங்கள் கூட்டணி எளிதாக கொண்டு சென்று வெற்றி பெற வைக்க முடியும். ஏற்கனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில், தினகரன் வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது.
தினகரனின், '20 ரூபாய் டோக்கன் பார்முலா'வை எல்லாம் அடிக்கிற மாதிரி, ஆளுங்கட்சியினர் தனி பார்முலாவை வச்சிருப்பாங்க பாருங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும், 1,660 சிறப்பு பயிற்றுனர்கள், பணி நிரந்தரம் கோரி சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறன் மாணவர்கள், 1.30 லட்சம் பேருக்கு பயிற்றுவிப்பது தான், இவர்களின் பணி. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல; கூடுதல் கவனமும், சகிப்பு தன்மையும் அவசியம். ஆனால், அதற்கேற்ற ஊதியம், சமூக பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்படுவ தில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செல்லப் பிள்ளைகளான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் குறைகளை, அவரது மகன் ஸ்டாலின் தீர்ப்பாரா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும்' என, தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதை, பா.ம.க., 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.
நமக்கு கிடைத்த நீதி என்னவென ஒவ்வொரு பாமரனும் அறியணும்னா, மாநில மொழிகளில் தீர்ப்பு வெளியிடுவது தான் சரியாக இருக்கும்... தலைமை நீதிபதிக்கு சபாஷ்!