மாமல்லபுரம்:சிறுதானிய பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய வேளாண் விலை மற்றும் செலவுகள்ஆணையத்திடம், தமிழக அரசு வலியுறுத்தியது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேச பகுதிகளில், விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது.
காரிப், ராபி ஆகிய பருவங்களில், நெல், கம்பு, கேழ்வரகு, துவரம் பருப்பு, உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம், 23 வகை வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய அரசிடம்பரிந்துரைக்கிறது.
விளைபொருட்களின் தேவை, வினியோகம், உற்பத்தி செலவு, உள்ளூர், சர்வதேச சந்தை விலை, உற்பத்தி செலவை விட, குறைந்தபட்சம் 50 சதவீதம் லாபம் உள்ளிட்டவை குறித்து, ஒவ்வொரு மாநில அரசும் கருத்தறிந்து, அதன் அடிப்படையில், விலை நிர்ணயத்திற்கு பரிந்துரைக்கும்.
தென்மண்டல மாநிலங்களின், 2023 - 24ம் ஆண்டு, காரிப், ராபி ஆகிய பருவங்களின் விளைபொருட்கள் விலை பரிந்துரைக்காக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், ஆணையம் கலந்தாய்வுக் கூட்டத்தை, நேற்று நடத்தியது.
அதன் தலைவர் விஜய்பால் சர்மா, ஆணைய நோக்கம், செயல்பாடுகளை விளக்கினார். மாநிலங்களின் வேளாண்மை துறையினர், வேளாண்மை பல்கலைக்கழகத்தினர் பங்கேற்றனர்.
மாநில சாகுபடி பரப்பு, விவசாய, தோட்டப் பயிர்கள் விளைவித்தல், விவசாய சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை விளக்கினர். விவசாயிகளின் நலன் கருதி, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து, ஆணையத்திடம் முன்மொழிந்தனர்.
தமிழக அரசின் சார்பில், வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, விலை குறித்து முன்மொழிந்தார். தமிழகத்தில், திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள், செங்காந்தள் மலர், கண்ணொளி கிழங்கு ஆகியவற்றின் மருத்துவ சிறப்பு குறித்து விளக்கினார்.
இத்தகைய பயிர்களுக்கும் ஆதார விலை நிர்ணயித்தால், விவசாயிகள் பயன்பெறுவர் என விளக்கி, மத்திய ஆணையம், இவற்றுக்கும் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என,வலியுறுத்தினார்.