காஞ்சிபுரம்:கிராமப்புறங்களில் பசும்பால் விலை ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஐந்து ரூபாய் என, பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புற கால்நடை வளர்ப்போரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெல் சாகுபடிக்கு அடுத்த படியாக, ஆடு, மாடுகள் கால்நடை வளர்க்கும் பிரதான தொழிலாக உள்ளது. இதில், ஆடு வளர்ப்போரை காட்டிலும், கறவை மாடுகளை வளர்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்போருக்கு, ஆண்டு இறுதியில் விற்பனை செய்யப்படும் குட்டிகளின் எண்ணிக்கையை பொருத்து, வருவாய் கிடைக்கும். கறவை மாடுகளுக்கு, இதுபோல இல்லை. கறவை மாடு வளர்ப்போருக்கு, தினசரி பால் மூலமாக வருவாய் கிடைக்கும்.
ஆர்வம்
குறிப்பாக, கறவை மாடுகளின் மூலமாக, தினசரி பால் கறந்து விற்பனை செய்வதன் மூலமாக, கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது. இதனால், பெரும்பாலான கால்நடை வளர்ப்போர், எருமை மற்றும் கறவை பசுக்களை வளர்ப்பதற்கு, அதிகம் ஆர்வம் ஈட்டி வருகின்றனர்.
உதாரணமாக, கறவை மாட்டின் பால், ஒரு லிட்டர் 22 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. ஒரு மாடு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும், 5 லிட்டர்பாலை கறந்தால், தினசரி110 ரூபாய் வருவாய் எளிதாக கிடைத்து விடும்.
பத்து மாடுகள் வைத்திருப்போர், தினசரி ஆயிரம் ரூபாய் வரையில் வருவாய் ஈட்ட முடியும்.
கிராமப்புறங்களில், கறவை மாடு வளர்ப்போரிடம், பால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு, பால் கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர், தனியார் தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு, நேரடியாக பால் விற்பனை செய்யும் போது, அவர்களால் கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது.
கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான கறவை மாடு வளர்ப்போர், தனியார் பால் வியாபாரிகளை நம்பி கறவை மாடுகளை வளர்க்கின்றனர். ஒரு சிலர் பால் வியாபாரி கொடுக்கும் முதலீடு பணத்தில் மாடு பிடித்து பாலை கறந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், பால் வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலை தான் பாலை கறந்து ஊத்தும் கறவை மாடு வளர்ப்போருக்கு கிடைக்கும்.
அதன்படி, ஒரு லிட்டர் பசும் பாலுக்கு, 22 ரூபாய். ஒரு லிட்டர் எருமை பாலுக்கு, 25 ரூபாய் வரையில் மாடு வளர்ப்போருக்கு பால் வியாபாரிகள் கொடுத்து வந்தனர்.
சமீபத்தில், கிராமப்புறங்களில் பால் விற்பனை செய்யும் வியாபாரிகள் பால் கொள்முதல் செய்யும் விலை மூன்று ரூபாய் வரையில் உயர்த்தி உள்ளனர்.
அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல், ஒரு லிட்டர் பசும்பாலுக்கு, 25 ரூபாயும். எருமை பாலுக்கு, 30 ரூபாய் வழங்க உள்ளனர். இது, கால்நடை வளர்ப்போர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகிழ்ச்சி
இதுகுறித்து பால் வியாபாரி என். சுதாகர் கூறியதாவது:
மழைக் காலத்தில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, தனியார் பால் தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்வதை குறைத்து விடுகிறது. கோடை காலத்தில் நிறைய பால் தேவைப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், பால் உற்பத்தி குறைந்து விடுகிறது.
இருப்பினும், கறவை மாடு வளர்ப்போருக்கு சராசரியாக விலை நிர்ணயம் செய்து, 22 ரூபாய் வழங்கி வந்தோம். நடப்பாண்டு முதல், ஒரு லிட்டர் பாலுக்கு, 25 ரூபாய் வழங்க உள்ளோம். எருமை பாலுக்கு, 30 ரூபாய் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, கறவை மாடு வளர்க்கும் மோகன் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளாக பால் விலை உயரவில்லை. நடப்பாண்டு ஒரு லிட்டர் பாலுக்கு ஐந்து ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
நகர் புறங்களில் அரசு பால் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்வது போல், கிராமப்புறங்களிலும் கொள்முதல் செய்தால், கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.