சென்னை:மின் கட்டணத்தை குறித்த காலத்தில் செலுத்த, பொது மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற தமிழக அரசின் துறைகள், 4,584 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இது, கடும் நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியத்திற்கு, மேலும் அதிக சுமையை ஏற்படுத்திஉள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் என, அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.
அபராதம்
வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் சேர்த்து, கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.
இதேபோல் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு காலக்கெடு உள்ளது; அந்த தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தி விடுகின்றன.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் தெரு விளக்குகள், குடிநீர் வினியோகம் போன்ற மக்களுக்கான சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அவற்றுக்கு மட்டும் மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து, கட்டணம் செலுத்த 60 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அப்படி இருந்தும், அவை பல மாதங்களாக கட்டணத்தை செலுத்தாமல் உள்ளன.
இதேபோல், குடிநீர் வாரியமும் மிக அதிகளவில் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி குடிநீர் வாரியம் மட்டும், 2,470 கோடி ரூபாய் மின் கட்டண நிலுவை வைத்து உள்ளது.
நிதி நெருக்கடி
இதை தொடர்ந்து மாநகராட்சிகள், 660 கோடி ரூபாய்; நகராட்சிகள் 319 கோடி ரூபாய்; பேரூராட்சிகள் 48 கோடி ரூபாய்; ஊராட்சிகள் 932 கோடி ரூபாய் என, உள்ளாட்சி அமைப்புகள், 1,959 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.
வருவாய், கல்வி உள்ளிட்ட மற்ற அரசு துறைகள் 155 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளன. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக அரசு துறைகள், 4,584 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் அலட்சியமாக உள்ளன.
ஏற்கனவே மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனுடன், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில், அரசு துறைகள் மின் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவது, வாரியத்திற்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது.