சென்னை:விமான நிலையம் - கிளாம்பாக்கம் 'மெட்ரோ ரயில்' விரிவாக்கத் திட்டத்திற்கு, தமிழக அரசின் உயர் அதிகார குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் தற்போது 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என 2018ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ., துாரத்திற்கு 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னையின் பிரதானமான, ஜி.எஸ்.டி., சாலையையொட்டி அமையவுள்ள இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க நகர், தாம்பரம்.
இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் ஒப்படைத்து, பல மாதங்கள் ஆகின்றன.
இருப்பினும், இந்த திட்டத்திற்கு, தமிழக அரசின் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசின் உயர் அதிகார குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தயானந்த் கிருஷ்ணன் என்பவர் ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ள தகவலில் இது தெரிய வந்துள்ளது.
மேலும், இத்திட்டத்திற்கான 'டெண்டர்'கள் வெளியிட்டு, கட்டுமானப் பணிகளை துவங்க தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஒசூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும், இதற்கான, பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.