புதுடில்லி:அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலவரம் மற்றும் நம் படையினரின் தயார் நிலை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்றுமுன் தினம் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில், சீன படையினர் கடந்த மாதம் அத்துமீறி நுழைய முயன்றனர்.
அவர்களை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினரும் கைகளால் தாக்கிக் கொண்டனர். நம் வீரர்கள் தொடர்ந்து தாக்கியதில் சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் நடந்த ஆறு வாரங்களுக்கு பின், நம் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதியில் கடந்த 21ம் தேதி முதல்முறையாக ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதிக்கு நேற்று வந்தார். அங்கு கடந்த மாதம் மோதல் நடந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது எல்லையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பல்வேறு ராணுவ நிலைகளுக்கு சென்று அங்கு வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
எல்லையில் நம் படையினர் விழிப்புடன் கண்காணிப்பது குறித்து பாராட்டு தெரிவித்த மனோஜ் பாண்டே, இதே அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் பணியை தொடரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.