மாம்பழ ஏற்றுமதிக்குபுகழ் பெற்ற, கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூரில் உள்ள, 'ஏ.பி.சி., புரூட்ஸ்' என்ற, பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணமான, சாந்தி விஜயன்: கணவர், வங்கியில் மேலாளராக பணிபுரிந்தார். மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று விலைக்கு வந்த போது, அதை வாங்க தீர்மானித்தோம்.
என் நகைகளையும் விற்று, நிறுவனத்தை துணிச்சலாக வாங்கினோம். தற்போது, எங்களின் அந்த நிறுவனத்தை, பெற்றோர், இரு பிள்ளைகளுடன் குடும்பத் தொழிலாக நிர்வகிக்கிறோம்.
நான், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். கூட்டு உழைப்பால் பெரும் வெற்றியை வசப்படுத்தலாம் என்பதற்கு, பழக்கூழ் உற்பத்தியில், எங்களின் நிறுவனம் அடைந்துஇருக்கும் உயரம்,கண் கூடான உதாரணம்!
ஆரம்பத்தில், 3 லிட்டர் கேனில் பழக்கூழை விற்பனை செய்தோம். கேன்களை அடுக்கி வைக்க, அதிக இடம் தேவைப்பட்டதுடன், செலவும்அதிகரித்தது.
இத்தாலியில் இருந்து பிரத்யேக மிஷன்களை இறக்குமதி செய்ய, கோடிக்கணக்கில் கடன் வாங்கினோம்.
பின், 200 லிட்டர் கொள்ளளவுஉடைய, 'பேரல்'களில், பழக்கூழை நிரப்பினோம்; ஐந்து ஆண்டுகள் போராடி, கடனை அடைத்தோம்.
ஒரு கட்டத்தில்,குடோனில் அடுக்கி வைத்திருந்த பேரல்கள், திடீரென வெடிக்க ஆரம்பித்தன.
எரிமலை குழம்பு வெடிக்கிற மாதிரி, தினமும் நுாற்றுக்கணக்கான பேரல்கள், பயங்கர சத்தத்துடன் வெடிக்க, அதன் மூடிகள், 100 அடி உயரத்துக்கு பறந்தன; பழக்கூழ்கள் நாலாபுறமும் தெறித்தன.
ஊழியர்கள்பலரும், வேலைக்கு வரவே பயந்தனர். சரியான வெப்பநிலை மற்றும்அழுத்தத்தில், பழக்கூழை பேரலில் அடைப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடித்தோம்.
இத்தாலியில் இருந்து வல்லுனர்களை வரவழைத்து, எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சிக் கொடுத்தோம்; பின், பிரச்னை சரியானது.
கடந்த 2012ல் பழக்கூழ், 'இண்டஸ்ட்ரி' வீழ்ச்சியடைந்தது; நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டன. நாங்களும் பிசினஸ் வேண்டாம் என்று முடிவுக்கு வந்தோம்.
ஆனாலும், 'இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம். எந்த சூழ்நிலையிலும் தொழிலை கைவிடக் கூடாது' என, பிடிவாதமாக இருந்ததால், அடுக்கடுக்கான கஷ்டங்களில் இருந்து மீண்டு வளர்ச்சி பெற்றோம்.
இன்று, பழக்கூழ் உற்பத்தியில் இந்தியாவில் மூன்றாம் இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும், எங்கள் நிறுவனம் உள்ளது.