பராசங்குபுரம்:திருவள்ளூர் - - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட பராசங்குபுரம்.
இந்த நெடுஞ்சாலையில், அரசு, தனியார், தொழிற்சாலை பேருந்து, கனரக வாகனங்கள் என, தினமும், 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில், தொடுகாடு, பராசங்குபுரம், போளிவாக்கம் உட்பட பல இடங்களில் நெடுஞ்சாலையோர மணல் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளங்கள் உருவாகி உள்ளது.
இந்த சாலையில் நேற்று அதிகாலை ஆந்திராவிலிருந்து நெல் ஏற்றி காஞ்சிபுரம் நோக்கி வந்த டாடா லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி, எதிரே வந்த வாகனத்திற்கு லாரி வழிவிடும் போது நெடுஞ்சாலையோர பள்ளத்தால் லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இதில் லாரி ஒட்டுனர் ஆந்திர மாநிலம், அல்லாகுப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், 38, என்பவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் திரும்பி சென்றார்.
இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளங்களால் இதுவரை 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை தகவலின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர பள்ளங்களை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.