சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நேற்று துவங்கின.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஹாக்கி உட்பட மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன.
இதன் துவங்க விழா, நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மே தின விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பள்ளி மாணவ - மாணவியருக்கான கால்பந்து போட்டி, பொது பிரிவினருக்கான ஓபன் கபடி மற்றும் பேட்மின்டன் போட்டிகளை 'டாஸ்' போட்டு துவக்கி வைத்தார். இதில், மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, தி.நகர் கண்ணதாசன் மைதானத்தில், பள்ளி மாணவ - மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான சிலம்பம், அரசு ஊழியர்களுக்கான சதுரங்க போட்டிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் எஸ்.டி.ஏ.டி., துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கான 'ஆன்லைன்' பதிவு நீட்டிக்கப்பட்டதால், நேற்று துவக்க விழா மட்டும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 29ம் தேதி முதல் போட்டிகள் நடக்கும் என, சென்னை மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் தெரிவித்தார்.