சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பியூச்சர் 'டேலன்ட்ஸ் - டி 20' கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மொத்தம் 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா மற்றும் லயோலா அணிகள் மோதின. டாஸ் வென்று முதல் ஆடிய, விவேகானந்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 227 ரன்கள் குவித்தது. அணி வீரர் நிதீஷ் ராஜகோபால், 58 பந்துகளில் 9 சிக்சர், 8 பவுண்டரி 122 ரன்கள் குவித்தார்.
அவரை தொடர்நது முகமது, 46, அஜய் 27 ரன்களும் அடித்தனர். அடுத்து பேட் செய்த, லயோலா அணி, விவேகானந்தா வீரர் வித்யுத் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 14.2 ஓவர்களில் 63 ரன்களில் சுருண்டது.
வித்யுத் 2.2 ஓவர்கள் பந்து வீசி, நான்கு விக்கெட் எடுத்து ஆறு ரன்களை கொடுத்தார். சிலம்பரசன், சஞ்சய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர். இதனால், 164 ரன்கள் வித்தியாசத்தில் விவேகானந்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மதியம் நடந்த மற்றொரு அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., - குருநானக் அணிகள் மோதின. முதலில் ஆடிய குருநானக் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அணி வீரர் கணேஷ், 36 பந்துகளில் 59 ரன்களும், அருண், 53, அனிருத் 36 ரன்களும் அடித்தனர்.
அடுத்து களமிறங்கிய, எஸ்.ஆர்.எம்., பல்கலை, 17.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. குருநானக் வீரர் சுனில் கிருஷ்ணா, 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3விக்கெட்களும், தரன் 3.2 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார்.
வெற்றி பெற்ற குருநானக் மற்றும் விவேகானந்தா கல்லுாரிகள் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.