சென்னை மும்பையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி 14 கிலோ தங்க நகைகளை சென்னையில் விற்க வந்த இரு வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.சென்னை, சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் நேற்று யானைகவுனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்ட போது, ஏராளமான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.
தங்க வளையல்கள், மோதிரம், செயின்கள், கம்மல், நெக்லஸ் உள்பட 14 கிலோ மதிப்புள்ள, 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் இருந்தன. அவர்களிடம் தங்க நகைகளுக்கான எந்த ஆவணமும் இல்லாததால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்கள் மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த நகை வியாபாரிகள் முகேஷ்பவர்லால் ஜெயின், 49, சிக்கந்தர் சாந்தாராம் ஷிக்வான், 39 என்பது தெரியவந்தது.
அவர்களிடம் பறிமுதல் செய்த நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர். மும்பை நகை வியாபாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.