சென்னை, வண்டலுார் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புது பேருந்து நிலையத்தில் இருந்து, 350 மாநகர பேருந்துகளை இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பட்டியல் தயாரித்துள்ளது.
45 ஏக்கர்
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதன் வாயிலாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லவும், சென்னை நோக்கி வரும் பஸ்கள் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தும் வகையிலும், 45 ஏக்கரில் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. இதற்கிடையே, எந்ததெந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களை இங்கிருந்து இயக்குவது, சென்னை மாநகரின் பகுதிகளை இணைக்க மாநகர இணைப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புது பஸ் நிலையம் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ள நிலையில் விரைவு, மாநகர இணைப்பு பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வழித்தடம்
இதற்கான, பணிமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இங்கிருந்து சென்னையில் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் 350 இணைப்பு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான, வழித்தடங்களை தேர்வு செய்து பட்டியலை தயாரித்து உள்ளோம். பிராட்வே, கோவளம், எண்ணுார், திருவொற்றியூர், பூந்தமல்லி, கோயம்பேடு, செங்குன்றம், அடையார், வேளச்சேரி, மாமல்லபுரம், மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். பயணியரின் தேவை அதிகரிக்கும் போது, மாநகர பஸ்களை அதிகரித்து இயக்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.