சென்னை, இந்திய தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜயன், ஒருங்கிணைப்பாளர் யாவர் தாலா, சபாபதி குழுமத் தலைவர் சபாபதி ஆகியோர் அளித்த பேட்டி:
இந்திய தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், ஜன., 31 முதல், பிப்., 3ம் தேதி வரை, சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் உள்நாட்டைச் சேர்ந்த 450 நிறுவனங்களும், ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி, தென் அமெரிக்கா, போர்ச்சுக்கல் உட்பட, 20 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
கண்காட்சியின் ஒரு பகுதியாக, தோல் பொருட்கள் ஆடை அலங்கார அணிவகுப்பு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பிப்., 1ம் தேதி நடக்கிறது. இதில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் அணி வகுப்பு இடம் பெறும்.
தற்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பூஜ்ஜியம் கழிவு நீர் வெளியேற்ற தெழில்நுட்பம், சூரிய சக்தி மின்சார பயன்பாடு உட்பட, நவீன பசுமை தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். மேலும், தோல் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவற்றை புதிய பொருட்களாக தயாரிக்கிறோம்.
தோல் துறை வாயிலாக 40 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியும், 1.21 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. இந்த மதிப்பு, 2025ல் 3 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.