பொன்னேரி:பொன்னேரி அடுத்த, குண்ணம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் குமார், 54; கூலித் தொழிலாளி.
நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் இவரது வீடு திடீரென திப்பிடித்து எரிய துவங்கியது. தீ மளமளவென அதிகரித்து அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. இதில், வேண்டாமிர்தம் என்பவரது வீடும் தீப்பிடித்து எரிந்தது.
பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீ அணைக்கப்பட்டது. அதற்குள் வீடுகளில் இருந்த, மூன்று பீரோக்கள், பிரிட்ஜ், பைக், துணிகள், பாத்திரங்கள் என அனைத்தும் தீக்கிரையாகின. வீடுகளில் இருந்த ஆதார், ரேஷன் உள்ளிட்ட அரசு ஆவணங்களும் தீயில் எரிந்து சாம்பல் ஆயின.
மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வட்டாட்சியர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டார்.
இந்த தீ விபத்து தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.