சென்னை, குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னையில், 'ட்ரோன் கேமராக்கள்' மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே, கவர்னர் ரவி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
இதையொட்டி, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை, கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு பணியில், 6,800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும், விமான நிலையம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில், பாதுகாப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், மெரினா உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படையினரும் ரகசியமாக கண்காணித்து, நாசவேலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள, அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரோந்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக வாகன சோதனை செய்யப்படுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி, இன்றும், நாளையும், சென்னையில், 'ட்ரோன் கேமராக்கள்' மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.