கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த விழாவில், பொன்னேரி சப் - கலெக்டர் ஐஸ்வர்யா, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா, தலைமை ஆசிரியர் லதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு
பள்ளி மாணவியர், தப்பாட்டம் வாயிலாக, கலெக்டருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவியரின் சாதனைகள், படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டு மாணவியரை பாராட்டினார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றபின், மாணவியர் மத்தியில், கலெக்டர் பேசியதாவது:
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில், அதிக அளவில் பெண் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. தமிழகத்தின் வளர்ந்த மாவட்டத்தில் இதுபோன்ற குழந்தை திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமண சட்டம் மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கும்மிடிப்பூண்டியில், தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதுபோன்ற குழந்தை திருமணத்தை தடுக்க, குழந்தை பாதுகாப்பு அவசர உதவி எண்: 1098ஐ தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும்.உலக அரங்கில், இந்திய பெண்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பல திறமைகளை கொண்டுள்ள நீங்களும் சாதிக்க பிறந்தவர்களே.
உறுதிமொழி
நீங்கள் சந்திக்க நேரிடும் சோதனைகளை கடந்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, மாணவியர் சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாலங்காடு ஊராட்சி அரசு துவக்கப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து, ஜெயா வேளாண் கல்லுாரி மாணவியர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கட்டாய கல்வி, குழந்தை திருமணம் தவிர்ப்பது, பாலின சமத்துவம், 'காவலன் ஆப்' உள்ளிட்டவை குறித்து விளக்கினர். பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருவாலங்காடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.