மாதவரம், சென்னை மாதவரம், தணிகாசலம் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 65. அவர், நேற்று காலை குமரன் நகர், 80 அடி சாலை வழியாக, 'ரெனால்டோ க்விட்' காரில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த, 24 அடி அகலம் உடைய மழைநீர் வடிகால் கால்வாயில் தடுப்புச்சுவரை உரசி பாய்ந்தது.
மாரிமுத்து, அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின், கிரேன் உதவியுடன், காரும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த கால்வாயின் தடுப்பு சுவர், 2015ம் ஆண்டு முதல் சேதமடைந்து இருந்தது. இதுவரை அதை சீரமைக்காமல், இது போன்ற விபத்துகள் தொடர்கின்றன.
மழைநீர் வடிகாலின் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைத்து, அதன் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்களின் கோரிக்கை, ஏழு ஆண்டாக கிடப்பில் உள்ளது.