சென்னை, 'சென்னை பாரதிய வித்யாபவன்' என்ற சமூக நிறுவனம், 'ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ்' மற்றும் 'உறவுச்சுரங்கம்' இலக்கிய அமைப்பு ஆகியவை இணைந்து, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென் கீழ்க்கணக்கு நுால்கள் குறித்து, 36 இளம் பேச்சாளர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளது.
மொத்தம், 36 வாரம் நடக்கும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் ஆளுமைக்கு, 'தமிழ் விருது'ம் வழங்கப்பட உள்ளது.
இதன் துவக்க விழா மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில், நேற்று மாலை நடந்தது. நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். இவர், பர்வீன் சுல்தானாவுக்கு தமிழ் விருதை வழங்கி கவுரவித்தார்.
பின், ராஜேஸ்வரன் பேசுகையில்,''இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. அந்தக் கால பெண்கள் கால்பந்து விளையாடிய செய்தி, சங்க இலக்கியத்தில் உண்டு. சங்க இலக்கியங்களை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.
பர்வீன் சுல்தானா பேசியதாவது:
இளைய தலைமுறை தமிழை கேட்க தயாராக உள்ளது. ஆனால் சொல்வதற்கு தான் சரியான ஆட்கள் இல்லை.
அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டாடுவதன் மூலமாக, தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக, தாமல் கோ சரவணன் நற்றிணை குறித்து பேசியதாவது:
நற்றிணை துாது இலக்கியத்திற்கான தாய் இலக்கியம். அறம் எனும் பெரிய துாணில் இருந்து அகம், புறம் என்ற இரண்டையும் தமிழர்கள் வடிவமைத்துள்ளனர் என்பது தான், இந்த இலக்கியங்கள் காட்டும் அழகு. இளைஞர்களின் மூளைக்குள் சங்க இலக்கியம் சென்று சேர வேண்டும் என்பது தான், இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் முரளி சிறப்புரை நிகழ்த்தினார். பாரதிய வித்யா பவன் செயலர் ராமசாமி, விழாவில் பங்கேற்றவர்களை கவுரவித்தார்.