கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கடந்தாண்டு 2,170 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் 52.93 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் எள், உளுந்து மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு நாள்தோறும் எள், உளுந்து மற்றும் மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம், உளுந்துார் பேட்டை, திருக்கோவிலுார், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.
ஆனால் எள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற உயர்விளைச்சல் பயிர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், செஞ்சி ஆகிய 5 மார்க்கெட் கமிட்டிகளில் மட்டுமே அதிகளவு வரத்து இருக்கும்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் விழுப்புரம், கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து பயிர்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டுஜனவரி முதல் டிசம்பர் வரையிலான பருவ காலத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 4,942 விவசாயிகள் 11,366 மெட்ரிக் டன் மக்காச்சோளம் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ரூ.14.95 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இதேபோல் 19,617 விவசாயிகள் கொண்டு வந்த 6,754 டன் எள், ரூ.30.77 கோடி; 3,409 விவசாயிகள் கொண்டு வந்த 1,448 டன் உளுந்து, ரூ.3.72 கோடி; 515 விவசாயிகள் கொண்டு வந்த 582 டன் மணிலா, ரூ.2.79 கோடி. 1,150 விவசாயிகள் கொண்டு வந்த 676 டன் கம்பு, ரூ.59 லட்சம்; 190 விவசாயிகள் கொண்டு வந்த 92 டன் கேழ்வரகு, ரூ.7 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கடந்தாண்டு முழுவதுமான பருவத்தில் 29,823 விவசாயிகள் கொண்டு வந்த 20,921 மெட்ரிக் டன் எடை கொண்ட எள், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மொத்தமாக ரூ.52.93 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என, கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் கடந்தாண்டு ஜன., முதல் டிச., வரையிலான பருவ காலத்தில் மொத்த வியாபாரம் ரூ.5.53 கோடியை எட்டியது. 1,899 விவசாயிகள் கொண்டு வந்த 1,989 மெட்ரிக் டன் மக்காச்சோளம், ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 1,105 விவசாயிகள் கொண்டு வந்த 136 டன் எள், 1 கோடியே 33 லட்சம்; 73 விவசாயிகள் கொண்டு வந்த 38.3 டன் வரகு, 8.2 லட்சம்; 17 விவசாயிகள் கொண்டு வந்த 2.4 டன் மணிலா, 2.1 லட்சம்; 26 விவசாயிகள் கொண்டு வந்த 13.89 டன் கம்பு, ரூ.3.9 லட்சம்; 48 விவசாயிகள் கொண்டு வந்த 4.4 டன் உளுந்து, 4.4 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
மொத்தமாக கடந்தாண்டு சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 3,000 விவசாயிகள் கொண்டு வந்த 2,170 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் மொத்தமாக 5 கோடியே 53 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என, கண்காணிப்பாளர் ராஜசெல்வி தெரிவித்துள்ளார்.