கிராம ஊராட்சிகளுக்கு மிகக் குறைந்த அளவில் நிதி ஒதுக்குவதால் அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.
கிராம ஊராட்சிகளை நிர்வகிக்க மாநில நிதிக்குழு மானிய கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம், மக்கள் தொகை அடிப்படையில் கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின் விளக்கு, சுகாதாரம், தற்காலிக பணியாளர்களுக்கான ஊதியம், தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்திர அமர்வுப்படி மற்றும் அவசர கால செலவுகளை மேற்கொள்கின்றனர்.
மேலும், மின் கட்டணம், நிரந்தர பணியாளர்களுக்கான ஊதியம், துாய்மைக் காவலர்களுக்கான ஊதியத்தை கணக்கிட்டு பிடித்தம் செய்து மீதம் உள்ள தொகையை பொது நிதிக்கு ஒதுக்குகின்றனர்.
இதனால், பல மாதங்களாக பொது நிதிக்கென நிதி வராமல் ஜீரோ பேலன்ஸ் கணக்காக இருந்து வருகிறது.
நிதி ஒதுக்கப்படும் ஊராட்சிகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே நிதி அனுப்புகின்றனர். இதையும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனுப்புகின்றனர்.
இதனால், ஊராட்சிகளில் அடிப்படை சுகாதாரத்தைக் கடைபிடிப்பதற்கும், குடிநீர் டேங்க்கை சுத்தம் செய்வதற்கும் நிதி இருப்பதில்லை. அதே ஊராட்சியில் மின் கட்டண கணக்கில் பல லட்சம் நிதி இருப்பில் உள்ளது. பொது நிதியை ஒதுக்கும் போது மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நிதி ஒதுக்குகின்றனர்.
ஆனால், மின் கட்டண நிதியை ஒரே அளவாக எல்லா ஊராட்சிகளிலும் பிடித்தம் செய்கின்றனர். பல ஊராட்சிகளில் மின் கட்டணம் அரசு பிடித்தம் செய்வதை விட மிக குறைவாக உள்ளது. இந்த ஊராட்சிகளில் மின் கட்டண கணக்கில் பல லட்சம் இருப்பு உள்ளது. ஆனால், இந்த தொகையை ஊராட்சி நிர்வாகம் வேறு செலவிற்கு பயன்படுத்த முடியாது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வரி தொகையை போல் 3 மடங்கு தொகையை மாநில அரசு மானியமாக வழங்கி வந்தது. அதையும் தற்போது நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கிராம சபைக் கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா என தொடர் செலவுகளால் ஊராட்சி நிர்வாகித்தினர் தடுமாறுகின்றனர்.
பணியாளர்களின் சம்பளத்தை கணக்கிட்டு பிடித்தம் செய்வதைப் போல் மின் கட்டணத்தையும் கிராமத்தின் பயன்பாட்டிற்கு தகுந்தாற் போல் கணக்கிட்டு பிடித்தம் செய்தால் ஓரளவிற்கு பொது செலவிற்கு நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க ஆணையர் மற்றும் செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்று கிராம ஊராட்சிகள் நிதியின்றி அவதிப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
செஞ்சியில் வெளிநடப்பு
இந்நிலையில், செஞ்சியில் நேற்று பி.டி.ஓ.,க்கள் கேசவலு, வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற ஊராட்சி தலைவர்கள் செஞ்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு உள்ளது. இந்நிலையில் எந்த நிதியில் கிராம சபைக் கூட்டம் நடத்த முடியும். எனவே கிராம சபைக் கூட்டத்தை நடத்த மாட்டோம் என கூறி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதிகாரிகள் தலைவர்களை மீண்டும் அழைத்து பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து தலைவர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். கிராம சபைக் கூட்டம் நடத்த ஒப்புக் கொண்டனர்.
-நமது நிருபர்-