விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் சேகரித்து சாலைகளில் வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என பிரித்து வாங்கப்படுகிறது.
அதன்படி, வடக்கு தெரு, மேல் தெரு, திரு.வி.க., வீதி, கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வாங்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி, சாலையில் அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வாகனங்கள் இருந்தும், குப்பைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சாக்கு மூட்டை குப்பைகளை சேகரிக்காமல் உடனுக்குடன் அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.