கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரும் சாலையில் தேசிய நெடுஞ்சாலைக்குள் வருவதற்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் வழியாக பிரிந்து, தேசிய நெடுஞ்சாலையோடு இணையும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலையை பாதுகாப்பாக பயன்படுத்திடும் பொருட்டு அப்பகுதியில் சிக்னல் விளக்குகளோ, அறிவிப்பு பலகைகளோ வைக்கப்படவில்லை.
தற்காலிகமாக ரோட்டின் நடுவே கற்களை அடுக்கி, இணைப்பு சாலைக்கான வழி அமைக்கப்பட் டுள்ளது. இந்த பிரிவு சாலையை பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தாமல் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் வரும் இணைப்பு சாலை வழியாகவே செல்கின்றன.
எவ்வித முன்னறிவிப்பும், குறியீடுகளும் இல்லாமல் சாலை நடுவே திடீரென சாலை பிரிவது தெரியாமல் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆபத்தான இப்பகுதியில் விபத்தினை தடுக்க நெடுஞ்சாலை மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விபத்துக்கள் தொடர்கின்றன.
எனவே, விபத்துகளை தடுக்க சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை பகுதியில் சிக்னல் மற்றும் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.