விழுப்புரம் : தனது கணவரின் இருதய சிகிச்சைக்கு உதவக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் வன அலுவலக ஓய்வுபெற்ற உதவியாளர் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மேரி ராணி மனு:
விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி, கடந்த 2015ம் ஆண்டு ஓய்வுபெற்றேன். தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாதம் இருமுறை கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்.
எனது கணவர் ராஜேந்திரனுக்கு கடந்த 2004ம் ஆண்டில் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. பின், 2007ம் ஆண்டில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
தற்போது கணவரின் இருதய துடிப்பு அளவு 29 சதவீதமாக உள்ளதால், உடனடியாக பேஸ்மேக்கர் கருவியை மாற்றி, புதிய கருவியை பொருத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கருவியை பொருத்த 3.80 லட்சம் ரூபாய் செலவாகும் என சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
எனது ஓய்வுதியத் தொகையில் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே எனது கணவரின் மருத்துவச் செலவுக்கு உரிய நிதியை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.