செய்யூர்:கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், நேற்று மாலை, வழக்கம் போல பள்ளி முடிந்து, பள்ளிக்கு சொந்தமான மினி வேன் மூலமாக, வீட்டுக்கு சென்றனர்.
மாலை 4.45 மணியளவில், விளம்பூர் கிராமத்தில், எம்.எம்., அலி நகர் பகுதியில், ஓட்டுனரின் கவனக்குறைவால், சாலையின் இடது புறம் இருந்த மின் கம்பத்தின் மீது வேன் மோதியதில், மின் கம்பம் முறிந்து வேன் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வேனில் பயணித்த 12 மாணவர்களும், எவ்வித காயமும் இன்றி தப்பினர்.
பின், வேனில் பயணித்த மாணவர்கள் அனைவரும், பத்திரமாக வேறு வாகனம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, பத்திரமாக விபத்துக்குள்ளான வேனை அகற்றினர்.