சென்னை:சர்ச்சைக்குரிய வகையில், சித்த மருத்துவ கருத்துகள் கூறியது தொடர்பாக, பிப்.,10க்குள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு, சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா. இவர், சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ, 'டிப்ஸ்' சொல்வதன் வாயிலாக பிரபலமானவர். சமீபத்தில் அவர் அளித்த சில, 'டிப்ஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, 'ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால், 3 கிலோ எடை கூடும்; குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும்; தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்' என்று தெரிவித்தார்.
இவை சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இவர் மீது, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அவரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியதுடன், நேரில் ஆஜராகவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லுாரி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று சித்த மருத்துவர் ஷர்மிகா, தன் வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், சித்த மருத்துவக் கல்லுாரி முதல்வர் கனகவல்லி உள்ளிட்டோர், ஷர்மிகாவிடம் புகார்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் கூறியதாவது:
சித்த மருத்துவ கவுன்சில் கொடுத்த அழைப்பாணையை ஏற்று, மருத்துவர் ஷர்மிகா ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது கருத்துகள் தொடர்பாக வந்த புகார்கள், அவரிடம் தரப்பட்டது. அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு, எழுத்து பூர்வமாக பதில் அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.
வரும் பிப்., 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது. அவர் விளக்கம் அளித்த பின், நிபுணர் குழுவின் பரிந்துரையி ன்படி, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.