சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், 'அம்மா சிமென்ட்' விற்பனையில் நடந்த முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தாராபுரம் தாலுகா, தம்புரெட்டிபாளையத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் யோகேஸ்வரன் தாக்கல் செய்த மனு:
கொலுமங்கங்குழி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளேன். அடித்தட்டு, நடுத்தர மக்களுக்காக, சலுகை விலையில் வழங்குவதற்கான 'அம்மா சிமென்ட் திட்டம்' அமலில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு மூட்டை சிமென்ட், 216 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து ஒன்றியத்தில், அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் நடந்த விற்பனையில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
பயனாளிகளுக்கு சிமென்ட் விற்பனை செய்ததாக, போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர்; ஆனால், ஒருவருக்கு கூட விற்பனை செய்யப்படவில்லை. கிட்டங்கியை ஆய்வு செய்த போது, 581 மூட்டைகளுக்கு பதில், 4 மட்டுமே இருந்தன. 4,217 மூட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளன. கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும், குந்தடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அனுப்பப்பட்டது. என் மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆஜராகினர்.
இதையடுத்து, விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை, நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.