சென்னை:நெல் உள்ளிட்ட 23 வகை பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவம் துவங்குவதற்கு முன்பாக, 23 வகையான பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்வது வழக்கம்.
பின், மாநில அரசுகள், ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும்.
விரைவில் காரிப் பருவம் துவங்கவுள்ளது. எனவே, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய குழு வாயிலாக, நேற்று கருத்து கேட்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா மாநில வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.
மத்திய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய குழு தலைவர் விஜய்பால் சர்மா, ஒவ்வொரு மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்டார்.
தமிழக வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை, 'சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
'நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, துவரை, நிலக்கடலை உள்ளிட்ட 13 வகை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு வருமானம் தரும் வகையில் ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தினார்.