கூடலுார்:கூடலுார் அருகே, காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டது.
கூடலுார் தேவர்சோலை சுற்றுவட்டார பகுதியில் இரவில் கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள்; விவசாய தோட்டங்களை யானை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையை பிடிக்க வலியுறுத்தி, இரு நாட்களுக்கு முன், அஞ்சுக்குன்னு பகுதியில், மக்கள் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'பிரச்னை தொடர்பாக பேசி தீர்வு காணப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவுண்டம்பள்ளி பகுதியில் நடந்தது. அதில், மாவட்ட கூடுதல் எஸ்.பி., மோகன்நிவாஸ், கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ் மற்றும் வனத்துறையின் அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.
'காட்டு யானை இரண்டு நாட்களில் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, மக்கள் தெரிவித்தனர்.
யானையை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை, மக்கள் ஏற்று கொண்டதால், பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டது.
மக்கள் கூறுகையில்,'காட்டு யானை பிரச்னைக்கு உடனடிதீர்வு காணவில்லை என்றால், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.