பந்தலுார்:பந்தலுாரில் இருந்து ஏலமன்னா வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
பந்தலுாரில் இருந்து மேங்கோரேஞ்ச் எஸ்டேட் ஏலமன்னா வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலை அமைந்து உள்ளது. இந்த சாலை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தாழ்வாக செல்லும் பகுதியில் சாலை முற்றிலுமாக பெயர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
சாலையில் வாகனங்களை இயக்குபவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் யானைகள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது.
சாலையை சீரமைத்து தரக்கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை. எனவே, பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்னர் சாலையை சீரமைக்க வேண்டும்.