சென்னை:ஒரு மாதத்துக்கு பின், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. நாளை முதல், இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று முற்பகல் வரையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், தென் மாவட்ட கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில், இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில், தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
தெற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில், நாளை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், 27, 28ம் தேதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், அதிகாலை நேர குளிர் மற்றும் பனிமூட்டமும், பகலில் வறண்ட வானிலையும் நிலவியது. எந்த இடத்திலும் பெரிய அளவில் மழை பதிவாகவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், 5 செ.மீ., மழை பெய்து உள்ளது.
திருநெல்வேலி, 4; வேதாரண்யம், ஆய்க்குடி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, 3; அதிராம்பட்டினம், ராமேஸ்வரம், கோடியக்கரை, தங்கச்சி மடம், கொடைக்கானல், சாத்துார், 2.
குன்னுார், திருக்காட்டுப்பள்ளி, பேராவூரணி, தென்காசி, வத்திராயிருப்பு, மணிமுத்தாறு, பாம்பன், கடலாடி, மதுரை, சேரன்மகாதேவி, கோடநாடு ஆகிய இடங்களில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.