சென்னை:சென்னையில் நாளை நடக்க உள்ள குடியரசு தின விழாவில், வெளி மாநில கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா நடக்கும்.
இந்த ஆண்டு அப்பகுதியில், மெட்ரோ ரயில் பணி நடப்பதால், விழா நடக்கும் இடம், மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை பகுதியில் மேடை அமைக்கப்பட்டு, அதையொட்டி இரு புறமும் பார்வையாளர்கள் அமர பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
நாளை காலை 8:00 மணிக்கு, கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின், விருதுகள் வழங்க உள்ளார்.
குடியரசு தின விழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தது.
கடந்த இரு ஆண்டு களாக, கொரோனா காரணமாக, அணிவகுப்பு வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இல்லாததால், அணிவகுப்பு வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழாவில், தமிழகக் கலைஞர்களின் கரகாட்டம், கை சிலம்பாட்டம் நடக்க உள்ளது. அத்துடன் ராஜஸ்தான் மாநிலக் கலைஞர்களின் குல்பாலியா நடனம், மஹாராஷ்டிரா கலைஞர்களின் கோழி நடனம், அசாம் கலைஞர்களின் பாகுரும்பா நடனமும் நடக்கிறது.
அணிவகுப்பில், 20 துறைகள் சார்பில், 21 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வர உள்ளன.
காலை 8:00 மணிக்கு துவங்கும் விழா, காலை 9:20 மணிக்கு நிறைவடையும் வகையில், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.