புதுடில்லி, சிறையில் இருந்து 40 நாள், 'பரோலில்' விடுவிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹிம், வாளால் கேக் வெட்டி கொண்டாடும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டில் தேரா சச்சா சவுதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கு, 16 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கு மற்றும் சீடர்கள் மீதான பாலியல் வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிமுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
![]()
|
அவர் ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தேரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஷா சத்னம் சிங்கின் பிறந்த நாளை கொண்டாட, 'பரோல்' கேட்டு குர்மீத் விண்ணப்பித்தார். இவருக்கு கடந்த 21ம் தேதி 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து உத்தர பிரதேசத்தின் பாக்பத் நகரில் உள்ள பர்னவா ஆஸ்ரமத்தில் குர்மீத் ராம் ரஹிம் தங்கி உள்ளார். அவர் பரோலில் வந்ததை அவரது சீடர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
கையில் பெரிய வாளுடன் கேக் வெட்டிய ராம் ரஹீம், 'கடந்த ஐந்தாண்டுகளுக்கு பின் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறேன். எனவே, ஐந்து கேக்குகள் வெட்ட வேண்டும்' என, தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில், ராம் ரஹீமுக்கு மூன்று வார கால பரோல் வழங்கப்பட்டது.
அடுத்து, கடந்த ஆண்டு ஜூனில் 30 நாட்களும், நவம்பரில் 40 நாட்களும் பரோல் வழங்கப்பட்டது.