சென்னை:மின் வாரியம் நேற்று நடத்திய பேச்சில் பங்கேற்ற தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், 20 சதவீதம் மேல் ஊதிய உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
தமிழக மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2019 டிச., முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக, மின் வாரிய இயக்குனர்கள், செயலர் இடம்பெற்ற ஊதிய உயர்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அக்குழு, 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், புதிய ஊதிய நிர்ணயம் குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
இம்மாதம் 9ம் தேதி நடத்த பேச்சின்போது, 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு தொழிற்சங்கங்களிடம் வழங்கப்பட்டது.
அதன் மீது நேற்று, 10 தொழிற்சங்கங்களிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், இன்று ஒன்பது சங்கங்களிடம் கேட்கப்பட உள்ளது.
நேற்று கூட்டத்தில் பங்கேற்ற பல சங்கங்களின் நிர்வாகிகளும், 20 சதவீதம் மேல் ஊதிய உயர்வை வழங்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 'காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்; ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை தொடர வேண்டும். 'அவுட்சோர்சிங்' முறையில் ஊழியர்களை நியமிக்க கூடாது' உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.