சென்னை:நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறைப்படுத்த, புதிய வரைவு விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி, தொழில் நிறுவனங்களில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரிக்க, அந்தந்த நிறுவனங்களே உரிய வசதிகளை செய்ய வேண்டும். இதற்காக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதில் நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் இடம் பற்றாக்குறை, பராமரிப்பு செலவு போன்ற பிரச்னைகள் எழுவதால், ஒரே பகுதியில், ஒரே துறையை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இருந்தால், அவர்கள் தங்களுக்குள் கூட்டாக சேர்ந்து, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி அமைக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படுவதில்லை என, புகார் எழுகிறது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையில், இந்த விவகாரத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறைப்படுத்த, புதிய வரைவு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்பட முடியாமல் போவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, அதை சரி செய்வதற்கும், அரசு தரப்பில் தொடர் கண்காணிப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய வகையில், புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில், இந்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பொது மக்கள், தொழில் துறையினர் தங்கள் கருத்துகளை, 60 நாட்களுக்குள், mscb.cpcb@nic.in என்ற இ - மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.