சென்னை:சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக உடல் உழைப்புத் தொழிலாளர்கள் ஆலோசனை குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்களை, அமைப்பு சார தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட நிதியுதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படித்தால் வழங்கப்படும் உதவித் தொகையை, 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவானது.
பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு நல உதவியை, 6,000 ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்; வாரியத்தில் பதிவு பெற்ற, 500 பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு, சொந்தமாக ஆட்டோ வாங்க, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்கும், குழு ஒப்புதல் அளித்தது.
கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், தொழிலாளர் துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசீமுதீன், தொழிலாளர் துணை ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.