முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பெயரில் உள்ள 'டுவிட்டர்' பக்கத்தில், தி.மு.க., கொடியுடன், 'விஸ்வாசம் மாறாது' என்ற பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 16ம் தேதி, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க, அமைச்சர் உதயநிதி மதுரை சென்றார். அப்போது, அழகிரி வீட்டுக்கு சென்று, அவரிடம் உதயநிதி ஆசி பெற்றார்.
அப்போது, தி.மு.க.,வில் இணைவது குறித்த கேள்விக்கு, 'கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும்' என, அழகிரி பதிலளித்தார்.
இந்நிலையில், அழகிரி பெயரில் உள்ள 'டுவிட்டர்' பக்கத்தில், தி.மு.க., கொடியுடன், 'ஆட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; ஆனால், விஸ்வாசம் அது என்றும் மாறாது' என, பதிவிட்டு உள்ளனர்.
அதேபோல அழகிரியின் மருமகள் அனுஷா தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆயிரம் மேகங்கள் மூடியபோதும், வானம் மாறாது' என, கூறியுள்ளார்.
வரும் 30ம் தேதி, தன் பிறந்த நாளை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளார், அழகிரி. அன்றைய தினம் அவர், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
- நமது நிருபர் -