பல்லடம்:'பெண்களே நாட்டின் கண்கள்,' என, பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நீதிபதி பேசினார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். வக்கீல்கள் வெங்கடாசலம், வேணுகோபால், சுதாகர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், நீதிபதி சித்ரா பேசியதாவது:
ஆணுக்கு நிகராக பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். படிக்கும் காலத்தில், படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு பெண்கள் முன்னேற வேண்டும். மொபைல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி கொண்டு, தேவையில்லாதவற்றை தவிர்த்திட வேண்டும்.
'பெண்களே நாட்டின் கண்கள்' என்ற கருத்துக்கு ஏற்ப, படிப்பில் மட்டுமன்றி, குடும்பத்தில், சமுதாயத்தில் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.