சென்னை,:ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
சென்னை, பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண், தன் கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவன பணிக்குச் சென்ற பின், அருகில் உள்ள வீட்டில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
அப்போது, அந்த வீட்டில் வசித்து வந்த 29 வயது வாலிபர், 2021ல் ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து, பெரவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, 2021 செப்., 7ல் வாலிபரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
வாலிபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 10 ஆயிரம் ரூபாயும் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இழப்பீடு தொகை மற்றும் அபராதம் சேர்த்து, 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை, சிறுமிக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள்
இதேபோல, தி.நகர் பகுதியைச் சேர்ந்த பெண் பணிக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது ஏழு வயது சிறுமியை, 'சாக்லேட்' வாங்கி கொடுத்து வன்கொடுமை செய்த வழக்கில், 2019ல் ஆக., 23ல் 27 வயது 'ஏசி மெக்கானிக்' கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கில், 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையுடன், அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டார்.