கோவை:போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று, கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஏர் அரேபியா' விமானம் வந்தது.
பயணியரின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை, விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில், விமானத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அந்த நபரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில், அவர் மேற்குவங்கம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவரிடம், ஷார்ஜாவிலிருந்து கோல்கட்டா செல்லாமல், கோவை வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். தொடர்ந்து, குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த நபரை தேசிய கீதம் பாடும்படி கூறினர்.
அவரால் தேசிய கீதத்தை முழுமையாக பாட முடியவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர், வங்கதேசத்தைச் சேர்ந்த அன்வர் உசேன், 28, எனத் தெரிந்தது. போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்ததும் தெரிந்தது.
அன்வர் உசேன், 2018-ம் ஆண்டு திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து உள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர், போலி பிறப்பு சான்றிதழ் தயார் செய்து, மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா முகவரியில் ஆதார் எண் பெற்றார்.
இந்த ஆவணங்கள் வாயிலாக, 2020-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றார். அந்த பாஸ்போர்ட் பயன்படுத்தி, ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலைக்கு சென்றார்.
மீண்டும் திருப்பூரில் வேலை பார்க்க, ஷார்ஜாவில் இருந்து கோவை வந்தது தெரிந்தது. விமான நிலைய அதிகாரிகள், அன்வர் உசேனை, பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.