திருச்சி:திருச்சியில், பணத்துக்காக தம்பதியை கடத்திய கும்பல், போலீசார் சுற்றி வளைத்ததால், நகை, பணத்தை பறித்துக் கொண்டு, கடத்தியவர்களை பாதி வழியில் விட்டுச் சென்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர்ஸ் டவுன் பகுதியில் வசிப்பவர் பழனியப்பன், 53; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
இவரது மனைவி சந்திரா, 42. இவர்களின் மகன் கலைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில், அலுவலக பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, 2021 தமிழக சட்டசபை தேர்தலில், 'மை இந்தியா பார்ட்டி' சார்பில், கரூர், கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதியில் சந்திரா போட்டியிட்டார்.
நேற்று முன்தினம் காலை, பழனியப்பன், சந்திரா இருவரும், சென்னையில் நிலம் வாங்குவதற்காக, 'இன்னோவா' காரில் புறப்பட்டனர். திருச்சி, சமயபுரம் அருகே ஹோட்டலில் காரை நிறுத்தினர்.
அப்போது, அங்கு வேறு ஒரு இன்னோவா காரில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தங்களை போலீஸ் என்றும், நிலம் வாங்கும் பணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தம்பதியிடம் கூறியுள்ளனர்.
பின், இருவரையும் தனித்தனி காரில் கடத்திய கும்பல், சந்திராவிடம், 'உன் மகனிடம் பேசி வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து வர சொல்' என, அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர்.
மகனை தொடர்பு கொண்ட சந்திரா, கடத்தப்பட்டதையும், பணம், நகையை கொண்டு வருமாறும் கூறி உள்ளார். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
பணத்தை வாங்க, மணப்பாறைக்கு வருவதாக கூறிய கடத்தல்காரர்கள், நேற்று மாலை 4:00 மணியளவில், இரண்டு கார்களில் மணப்பாறை வந்தனர்.
மணப்பாறை போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது, கார்கள் நிற்காமல் சென்றன. வையம்பட்டி சென்ற அந்த கும்பல், தம்பதியரின் காரை அங்கே விட்டு, தம்பதியுடன் அனைவரும் ஒரே காரில் ஏறி தப்பினர்.
வையம்பட்டி போலீசார் காரை நிறுத்த முயன்றனர். அங்கு, கடத்தல்காரர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தப்பினர். மீண்டும் திருச்சி வழியில் வந்து, மணப்பாறை அருகே குளித்தலை ரோட்டில் சென்றுள்ளனர்.
அப்போது, மற்றொரு காரில் தம்பதியின் மகன் கலைச்செல்வனும், மாற்று உடையில் இருந்த மணப்பாறை போலீசாரும் பின் தொடர்ந்தனர்.
பணத்துடன் வருவதாக கலைச்செல்வன் கடத்தல் கும்பலிடம் கூறியுள்ளார். நம்பிய கடத்தல்காரர்கள், தோகைமலை அருகே காரை நிறுத்தினர்.
பணத்தை வாங்க, கடத்தல் கும்பலில் ஒருவர் கலைச்செல்வன் கார் அருகே வந்த போது, காரில் இருந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
அதைப்பார்த்த கடத்தல்காரர்கள் காரில் வேகமாக தப்பினர். பிடிபட்ட நபர், திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த காளிதாஸ், 50, என்பதும், மற்றவர்கள், சிவகங்கை மாவட்டம், ஆராவயலைச் சேர்ந்த பிரேம், கணேசன், கார்த்திக் உள்ளிட்ட ஐந்து பேர் என்றும் தெரிந்தது.
காரில் கரூர் சென்ற கடத்தல்காரர்கள், சந்திராவின், 10 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு, அங்கிருந்து திண்டுக்கல் சென்று தம்பதியை இறக்கி விட்டு தப்பினர்.
தம்பதி பஸ் ஏறி, மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். போலீசாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தனர்.
மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில், தம்பதியரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
பிடிபட்ட காளிதாஸ், 20 ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த சாத்தையாவின் மகன்.
இவர் மீது, திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.