சென்னை, விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர், வருமானத்திற்கு அதிகமாக 1.66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து பதிவு செய்யும் பிரிவில், முதல் நிலை காவலராக பணிபுரிந்தவர் சவுந்தரராஜன், 44. இவர், விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
தன் பணிக்காலத்தில், 2014 - 2020 வரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர். தொடர் விசாரணையில், சவுந்தரராஜன் தன் பெயரிலும், மனைவி உமாதேவி பெயரிலும், 1.66 கோடி ரூபாய்க்கு, அதாவது 750.33 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சாதாரண இல்லத்தரசியாக இருந்த உமாதேவி, இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.