நாமக்கல்:மலேஷியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் இருந்து, அந்நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகளில், நாள் ஒன்றுக்கு, 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் முட்டை, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், லாரிகள் மூலம் தினமும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும், முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்திலும் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே கப்பல்களில், கன்டெய்னர் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முதன்முறையாக, 2022 டிச., முதல், இந்தியாவில் இருந்து, குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து, விமானம் மூலம் மலேஷியா நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி துவங்கி உள்ளது.
அந்நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு முட்டைக்கு தட்டுப்பாடு உள்ளது.
அதனால் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிக்க துவங்கி உள்ளது. இம்மாதம் மட்டும், 20 கன்டெய்னர் மூலம், ஒரு கோடி முட்டைகள் மலேஷியா செல்ல உள்ளன. பிப்ரவரியில் இது, 40 கன்டெய்னர்களாக உயரும்.
அடுத்த ஆறு மாதங்களில் மலேஷியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சிங்கப்பூர், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகள், இந்தியாவில் இருந்து, குறிப்பாக நாமக்கல்லில் இருந்து, முட்டைகளை வாங்கும் என, முட்டை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.