பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் தொங்க விடப்படுகின்றன. இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், புவி வெப்பமாதலை தடுக்க மரம் வளர்ப்போம் என பல்வேறு அமைப்புகளும், அரசும் வலியுறுத்தி வருகிறது.
ரோட்டோரங்களில் நிழல் தரும் வகையில், மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது, இவை விளம்பரம் பலகைகள் சுமக்கும் சுமைதாங்கியாக மாறியுள்ளன.
பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்குச்செல்லும் ரோட்டோரங்களில் உள்ள மரங்களில், ஆணிகள் அடிக்கப்பட்டு விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
ஏன் இந்த தயக்கம்?
பெரும்பாலான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மரங்களை ஆக்கிரமித்து ஆணி அடித்து விளம்பர பலகைகளை எவ்வித தடையுமின்றி வைக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு மற்றும் அதிகாரிகள் அறிவுரை எதையும் கண்டுகொள்ளாமல், விளம்பரம் செய்பவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.
மரங்களில் ஆணி அடித்து காயப்படுத்துவதால், அவை மரணிக்கும் சூழல் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும், எந்த துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.
அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆலம் விழுது ஆனைமலை குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: ஆலம் விழுது ஆனைமலை அமைப்பு சார்பில், மரங்களில் இருந்த ஆணிகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டோம்.
நடவடிக்கை எடுக்கணும்
கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், சேத்துமடை முதல், வேட்டைக்காரன்புதுார் வரை மரங்களில் அடித்திருந்த விளம்பர பதாகைகள், ஆணிகளை பிடுங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி பகுதி முழுவதும், இதுபோன்று மரங்களை காயப்படுத்தி விளம்பரம் செய்வது தொடர்கதையாகியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளாக ரோட்டோரங்களில் மரங்கள் வெட்டும் பணி வேதனையாக உள்ளது. மேலும், வேதனை தரும் வகையில், மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
இதனால், அதன் ஆயுள் குறைந்து பட்டு போய்விடுகிறது. பசுமைக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சியின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.