புதுடில்லி ''நீதிபதிகள் நியமனம் தொடர்பான புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையை, உச்ச நீதிமன்றம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது மிகத் தீவிரமான பிரச்னை,'' என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், சில மூத்த வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் 'கொலீஜியம்' கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
வழக்கமாக இந்த நடைமுறைகள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இந்த விவகாரம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது.
இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான ஆவணங்களை பொது வெளியில் வெளியிட்டது மிகத் தீவிரமான பிரச்னையாகும்.
குறிப்பாக, ரா மற்றும் ஐ.பி., எனப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளின் அதிகாரிகள் தங்களுக்கு பிரச்னை ஏற்படுமோ என அஞ்சுகின்றனர். இந்த அதிகாரிகள் எப்படி சுதந்திரமாக, ரகசியமாக செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.