புதுடில்லி:அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் மீது, 'பெரா' எனப்படும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அன்னியச் செலாவணி முறைகேடில் ஈடுபட்டதாக அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை தனக்கு தரும்படி தினகரன் சார்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு ஆவணங்களை தினகரனுக்கு வழங்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கின் விசாரணை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரலுக்கு ஒத்தி வைத்தனர்.