திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம், பலகட்ட சோதனைகளை கடந்து வந்தாலும், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், 5,664 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் ஏற்றுமதி நடந்துள்ளது.
பருத்தி பஞ்சு வர்த்தகத்தில் ஏற்பட்ட அரசியல் விளையாட்டால், கடந்தாண்டு, ஒட்டு மொத்த ஜவுளித்தொழிலுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விளைவிக்கப்பட்ட பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டதால், செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சு விலையும் கடுமையாக உயர்ந்தது.
பஞ்சு விலை உயர்வதால், நுால் விலையும் அபரிமிதமாக உயர்ந்து, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலையும் பதம் பார்த்தது. கடந்த ஆண்டின், முதல் ஆறு மாதங்கள், நுால்விலை எதிர்பாராத வகையில் உச்சத்தில் உயர்ந்தது. அப்போது, வலிய வந்த ஏற்றுமதி ஆர்டர்களை ஏற்க முடியாமல், திருப்பூர் தத்தளித்தது.
பஞ்சு இறக்குமதி வரியை நீக்கிய பிறகு பஞ்சு விலை நிலைக்கு வந்தது. ஜூலை துவங்கி டிச., மாதம் வரை, நுால் விலையும் குறைந்து, இயல்பு நிலைக்கு வந்தடைந்தது. நுால்விலை உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களில் விசாரணைக்கு வந்த ஆர்டர்களை ஏற்க முடியவில்லை.
சோதனை கடந்து...
நுால் விலை குறைய துவங்கிய பின், ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால், வர்த்தக வாய்ப்புகள் குறைந்தது. இப்படியாக, கடந்த ஆண்டு பல்வேறு சோதனைக்கு பிறகு பின்னலாடை ஏற்றுமதி தடுமாற்றம் அடைந்தது. கடுமையான சோதனைகள் வந்த போதிலும், திருப்பூரின், ஒன்பது மாத ஏற்றுமதி வர்த்தகம், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்., மாதம், 3,298 கோடி ரூபாய், மே - 3,337 கோடி, ஜூன் - 3,341 கோடி, ஜூலை - 3,198 கோடி அளவுக்கு, திருப்பூரில் இருந்து ஏற்றுமதி நடந்தது. அடுத்து, ஆக., முதல், அக்., மாதம் வரையிலான மூன்று மாதம், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் ஏற்றுமதி குறைந்தது.
ஆனால், நவ., மாதம், 2,601 கோடி ரூபாய்க்கும், கடந்த மாதம், 3,242 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்துள்ளது. கடுமையான போராட்டத்துக்கு பின்னரும், நடப்பு நிதியாண்டில் இதுவரை நடந்துள்ள ஏற்றுமதி, கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.
சாதனை படைத்து...
திருப்பூரில் இருந்து, 2021-22ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 20 ஆயிரத்து, 596 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது; நடப்பு நிதியாண்டின், அதே காலகட்டத்தில், 26 ஆயிரத்து, 260 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டை காட்டிலும், 5,664 கோடி ரூபாய் (27.20 சதவீதம்) வர்த்தகம் அதிகரித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'நுால் விலை உயர்வு மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது.
தற்போது, நுால்விலை குறைந்துவிட்டதாலும், ஆஸ்திரேலிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாலும், புதிய ஆர்டர்கள் திருப்பூருக்கு வருவது அதிகரிக்கும். இந்தாண்டு, புதிய வடிவத்துடன் ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று, வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது,' என்றனர்.
தேசிய அளவில் பார்க்கும் போதும், 3,476 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வர்த்தகம் நடந்துள்ளது. நுால்விலை சாதகமாக இருப்பதால், புதிய ஏற்றுமதி வர்த்தக ஆர்டர்களை பெற்றால், நடப்பு நிதியாண்டின் மொத்த ஏற்றுமதியும் உயர வாய்ப்புள்ளது.
Advertisement