திருப்பூர்;காரசார விவாதங்களால், திருப்பூர்ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் சூடுபறந்தது.
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தார்.
திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா பகுதி விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி:
திருப்பூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கி வருகிறது. இம்மையத்துக்கு புதிய இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. போதிய இடவசதி உள்ளதால், வேளாண் விரிவாக்க மையத்தை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலேயே, புதிய விரிவாக்க கட்டடத்தை அமைக்கவேண்டும்.
நொய்யலாற்று தண்ணீர், நல்லம்மன் தடுப்பணை, ஒட்டணைகளிலிருந்து வாய்க்கால் வழியாக, மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தை வந்தடைகிறது. மங்கலம், சுல்தான்பேட்டை பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் கலக்கிறது. சாய ஆலை, பட்டன், ஜிப் டையிங் நிறுவனங்களும் சாயக்கழிவுநீரை திறந்து விடுகின்றன. இதனால், ஆண்டிபாளையம் குளம் தற்போது மாசு அடைந்துள்ளது.
படகு சவாரி ஏற்படுத்த, தமிழக அரசு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. முதலில், குளத்தில் சாயக்கழிவு நீர், சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரசாரம்...
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் பேசுகையில், ''திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில், பணியில் இல்லாத பெண் ஒருவர், அலுவல் பணியில் ஈடுபடுகிறார். இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது,'' என்றார்.
பதிலளித்த சப்-கலெக்டர், 'தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்தினேன்; நீங்கள் சொல்வதுபோன்று வேறு நபர்கள் யாரும் அங்கு இல்லை,' என்றார்.
சதீஷ்குமார், ''நீங்கள் ஆய்வுக்கு வருவதை முன்னரே அறிந்து, அந்த பெண் வெளியேறிவிடுகிறார். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது; உங்களுக்கு அனுப்புகிறேன்,'' என்றார். இந்த காரசார விவாதத்தால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
என்னங்க ஆபீசர்...இப்டி பண்றீங்களே!
பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி கிராமத்தில், பி.ஏ.பி., உப பகிர்மான வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து, மகேஸ்வரி என்பவர் தொடர்ந்து மனு அளித்து வருகிறார்.
பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் ஆனந்த் பாலதண்டபாணி, ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளதாக, 2022 செப். 22ம் தேதி பதில் அளித்தார். டிச., 23ம் தேதி நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தண்ணீர் திறக்கும் முன் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றிவிடுவோம்,' என உதவி செயற்பொறியாளர் பதில் அளித்தார். தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் மகேஷ்வரி மற்றும் அவரின் கணவர் பழனிசாமி ஆகியோர், 'கடந்த 2021 முதல் முறையிட்டு வருகிறோம். பி.ஏ.பி., உப பகிர்மான வாய்க்கால் ஆக்கிரமிப்பை, இப்போ அகற்றுகிறோம்; அப்போ அகற்றுகிறோம் என்கிறீர்கள். இன்னும் அகற்றவில்லை. திறக்கப்பட்ட தண்ணீர், எங்கள் விவசாய நிலத்திலும், வீட்டுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இங்கு மனு அளித்து என்ன பயன்' என்றனர்.
அதற்கு பி.ஏ.பி., அதிகாரிகள், ஆக்கிரமிப்பை விரைவில் அகற்றிவிடுவோம் என, மழுப்பல் பதில் அளித்து ஒரு வழியாக சமாளித்தனர்.