ராஞ்சி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, தன் மீதான கட்சி தாவல் தடை சட்ட விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை, அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி, தான் நடத்தி வந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா - பிரஜாதந்திரிக் கட்சியை, 2020 டிசம்பரில் பா.ஜ.,வுடன் இணைத்து, அந்த கட்சியில் ஐக்கியமானார். இதையடுத்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
![]()
|
இதற்கிடையே, பாபுலால் மாரண்டியை கட்சி தாவல் சட்டத்தின் கீழ், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும்படி, ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர். சட்டப்பூர்வமாக அவர், தன் கட்சியை பா.ஜ.,வில் இணைக்கவில்லை என, அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்திய சபாநாயகர் ரவீந்திரநாத் மகதோ, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், தனக்கு எதிரான விசாரணையை ரத்து செய்யக்கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், பாபுலால் மராண்டி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ராஜேஸ் சங்கர், ''சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது,'' என கூறி, பாபுலால் மராண்டியின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.