வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் மழலையர் பள்ளிகள் (பிளே ஸ்கூல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து 'பெப்சா' மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
இளம் மழலையர் பள்ளிகள் என்ற பெயரில் தற்போது பலர் தங்கள் வீடுகளிலேயே பள்ளிகள் துவங்கி வருவது அதிகரித்துள்ளது. இப்பள்ளிகள் நடத்த தமிழக அரசு சார்பில் 2015ல் தனியாக சிறப்பு விதிமுறைகள் வெளியிட்டுள்ளன. இதன்படி சொந்த கட்டடம் அல்லது 5 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தப் பதிவு பெற்ற வாடகை கட்டடத்தில் தரை தளத்தில் மட்டும் வகுப்புகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஆனால் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இதுபோன்ற விதிகளை கடைபிடிப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகள் அனுமதி பெறாமல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாடிகளில் வகுப்புகளை நடத்துகின்றன. அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இதனால் முறையாக அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியார் சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடுமையாக பாதிக்கிறது. மாநிலம் முழுவதும் அங்கீகாரமின்றி இயங்கும் இளம் மழலையர் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 'பெப்சா' சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.